சென்னை,
மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழர் மரபின் தொன்மையை மேலும் அங்கீகரிக்கும் விதமாக, 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரிய மற்றும் சிறிய அளவிலான 20-க்கும் மேற்பட்ட செப்புத் தகடுகளை, நெதர்லாந்து அரசாங்கம் பிரதம் மோடியிடம் ஒப்படைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் அவரது மகனாகிய பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் அச்சடிக்கப்பட்ட இந்த செப்புத் தகடுகள் மூலம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் கலாசாரத்தின் குறிப்பிடத் தகுந்த ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
மேலும், பாரதக் கலாசாரம் எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதற்கான கூடுதல் சான்றாகவும் இந்நிகழ்வு அமைந்துள்ளது. உலகின் மூத்த குடியாய் போற்றப்படுகின்ற தமிழர் கலாசாரத்தை உலகெங்கும் கொண்டு செல்வதிலும், நமது பழமைவாய்ந்ந பொக்கிஷங்களை மீட்டுக் கொண்டு வருவதிலும் பிரதமர் மோடி தரும் முக்கியத்துவத்திற்கு உதாரணமாக இப்பெரும் நிகழ்வு அரங்கேறியிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும். தமிழக மக்கள் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.