வானதி சீனிவாசன் 
தமிழக செய்திகள்

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் - வானதி சீனிவாசன்

உலகின் நீளமான ஹைட்ரஜன் ரயிலை இயக்கும் சாதனையையும் படைத்திருக்கிறோம் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்...! என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இந்தியாவை உலகின் முதல் பொருளாதார நாடாக்கும் பிரதமர் மோடியின் கனவு நனவாக துணை நிற்போம்.

வளர்ச்சி

சுதந்திர இந்தியா இன்று 79 ஆண்டுகளை நிறைவு செய்து, 80-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த 79 ஆண்டுகளில், அதிலும் குறிப்பாக கடந்த 12 ஆண்டுகளில், இந்தியா அடைந்திருக்கும் வளர்ச்சி, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளையே மிரள வைத்துள்ளது.

அன்று கேலி இன்று சாதனை

1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, குண்டூசி கூட சொந்தமாகத் தயாரிக்க முடியாத நாடு என்று கேலி பேசினார்கள். பாம்பாட்டிகள் தேசம், பிச்சைக்காரர்கள் நிறைந்த நாடு என்று ஏளனம் செய்தார்கள். ஆனால், இன்று வணிக ரீதியாக செயற்கைக்கோள்களை ஏவும் அளவுக்கு இந்தியா வளர்ந்துள்ளது. இந்தியத் தொழில்நுட்பத்தில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரத்தை உருவாக்கியிருக்கிறோம். உலகின் நீளமான ஹைட்ரஜன் ரயிலை இயக்கும் சாதனையையும் படைத்திருக்கிறோம்.

844 மருத்துவக்கல்லூரிகள்

கடந்த 2014-ல் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தபோது, இந்தியாவில் 387 மருத்துவக் கல்லூரிகளும், 51,348 எம்.பி.பி.எஸ். இடங்களும் மட்டுமே இருந்தன. மோடி அரசு மேற்கொண்ட முயற்சிகளால், இன்று இந்தியாவில் 844 மருத்துவக் கல்லூரிகளும், 1,39,000 எம்.பி.பி.எஸ். இடங்களும் உள்ளன.

90 புதிய விமான நிலையங்கள்

1947 முதல் 2014 வரை, 67 ஆண்டுகளில் இந்தியாவில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் 90 புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்படி மோடி அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.

4-வது பெரிய பொருளாதார நாடு

2014-ல் உலகின் 11-வது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, இப்போது அமெரிக்கா, சீனா, ஜெர்மனிக்கு அடுத்த நான்காவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் இந்த வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். வங்கதேசம், நேபாளம், இலங்கை போல இந்தியாவையும் அரசியல், பொருளாதார ரீதியாகச் சீர்குலைக்கப் பார்க்கிறார்கள்.

18 மணி நேரம்

எத்தனையோ நெருக்கடிகளை எதிர்கொண்டு, அவதூறுகளை தாங்கிக்கொண்டு, 2047-ல் சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடும் தருணத்தில், உலகின் முதல் பொருளாதார பலம் மிக்க நாடாக இந்தியாவை மாற்ற பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு நாளும் 18 மணி நேரத்திற்கும் மேலாக உழைத்து வருகிறார்.

மோடியின் கனவு

இந்தியாவை உலகின் முதல் பொருளாதார நாடாக்கும், உலகின் வல்லரசாக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்க நாம் அனைவரும் துணை நிற்போம். அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.