சென்னை,
சிவராசா அனோஜனின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,
சிவராசா அனோஜனின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது!
சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டதற்காக இலங்கையைச் சேர்ந்த தமிழரான சிவராசா அனோஜன் அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவுதி அரேபியா உச்சநீதிமன்றம் ரத்து செய்திருப்பது மனதுக்கு நிம்மதியளிப்பதோடு மிகுந்த மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
சவுதி அரேபியாவில் வேலைக்காகச் சென்ற சக தமிழரான சிவராசா அனோஜன் மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தியை அறிந்த நாளில் இருந்தே அவரது பெற்றோரிடம் நேரடியாக உரையாடியதில் தொடங்கி, கருணையின் அடிப்படையில் சிவராசா அனோஜன் மரண தண்டனையை ரத்து செய்ய மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியது வரை தொடர்ந்து நமது தமிழக பாஜக சார்பாக நாம் எடுத்த பல முயற்சிகள் வீண் போகவில்லை என்று நினைக்கையில் மனம் நெகிழ்ச்சியடைகிறது.
இந்த இனிய தருணத்தில், மனிதாபிமான அடிப்படையிலும் ஒரு இளைஞரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் மரண தண்டனையை ரத்து செய்த சவுதி அரேபியா உச்சநீதிமன்றத்திற்கு தமிழர்களின் சார்பாக எனது முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். கதிர்காமம் முருகப் பெருமான் அருளால் சிவராசா அலோஜனின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ள இச்செய்தி தமிழகத்தில் மட்டுமல்லாது, உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளிக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.