உடுமலை,
நகை - பணத்தை திருப்பிக்கேட்டதால், பி.ஏ.பி. வாய்க்காலில் பெண்ணை தள்ளி தீர்த்துக்கட்டியதாக கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.
கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் கணேசன். அவருடைய மனைவி கீதா (வயது 33). இவர், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்தநிலையில் கீதா கணேசனை பிரிந்து, மூர்த்தி என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 15 வயதில் மகள் உள்ளார்.
தொடர்ந்து, கீதாவுக்கும், மூர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து மூர்த்தியை பிரிந்த கீதாவுக்கும், கோவை மேட்டுக்கடையை சேர்ந்த மெக்கானிக் கதிரவன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதையடுத்து, கீதாவிடம் இருந்து கதிரவன் நகை மற்றும் பணம் வாங்கியதாக தெரிகிறது. இதை அவரிடம் கீதா திருப்பிக்கேட்டு உள்ளார். இதனால் அவர்களுக்குள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில், அவரை கதிரவன் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கீதா, ரத்தினபுரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் கதிரவன், கீதா மற்றும் அவரது மகள் கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள தியேட்டரில் படம் பார்த்தனர். அதன்பிறகு நேற்று முன்தினம் காலை அவர்கள், காரில் திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே உள்ள அரசூருக்கு வந்தனர். அப்போது கதிரவன் தனது நண்பரான சுல்தான்பேட்டை அருகே உள்ள பூராண்டம்பாளையத்தை சேர்ந்த சண்முகவேலுவை அங்கு வரவழைத்தார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் சேர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். திடீரென கதிரவனும், சண்முகவேலுவும் சேர்ந்து, கீதாவை தாக்கி, அந்தப்பகுதியில் செல்லும் பி.ஏ.பி. வாய்க்காலில் தள்ளிவிட்டனர். வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக சென்றதால், அவர் தண்ணீரில் மூழ்கினார்.
இதையடுத்து போலீசில் சிக்கி கொள்வோம் என்ற அச்சத்தில், அவர்கள் 2 பேரும் சேர்ந்து, கீதாவை மீட்டனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர்களுடன் கீதாவின் மகளும் சென்றார். அங்கு கீதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அறிந்ததும் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு தையல் நாயகி மற்றும் குடிமங்கலம் போலீசார் அங்கு சென்று, இறந்த கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் அங்கு வருவதை பார்த்ததும் சண்முகவேலு தப்பிஓடிவிட்டார். இதையடுத்து கதிரவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கதிரவன் மற்றும் சண்முகவேலு ஆகியோர் நகை மற்றும் பணத்துக்காக கீதாவை தாக்கி, வாய்க்காலில் தள்ளிவிட்டு கொன்றது தெரியவந்தது. இதையடுத்து கதிரவனை போலீசார் கைது செய்தனர்.
கைதான கதிரவன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும். கீதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நாங்கள் இருவரும் கணவன் மனைவியாக நெருக்கமாக பழகி வந்தோம். இந்தநிலையில், கீதாவிடம் பணம் மற்றும் நகை வாங்கியிருந்தேன். ஒரு கட்டத்தில் என்னால் அதை திருப்பி தர இயலவில்லை. இதனால், கீதா என்னிடம் பணம் மற்றும் நகை கேட்டு தொல்லை கொடுத்தார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த நான், அவரை எப்படியாவது தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன். இதையடுத்து. பூராண்டம்பாளையத்தை சேர்ந்த நண்பரான சண்முகவேலுடன் சேர்ந்து கீதாவை கொலை செய்ய முடிவு செய்தேன். இதற்காக கீதாவை குடிமங்கலம் அருகே அரசூர் பகுதிக்கு காரில் அழைத்து வந்தேன். அங்கு வைத்து அவரை அடித்து வாய்க்காலில் தள்ளி விட்டோம். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார்.
பின்னர் போலீசில் சிக்கிக் கொள்வோம் என்ற அச்சத்தில், அவர் தண்ணீரில் தவறி விழுந்து விட்டதாக கூறி, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தோம். பின்னர் அங்கு வந்த ஊழியர்கள் உதவியுடன் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். எனினும் போலீசார் நடத்திய விசாரணையில் சிக்கிக் கொண்டேன் என்று வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து கதிரவன் பயன்படுத்திய கார் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சண்முகவேலுவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.