சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தலைமையில் இன்று (06.06.2026) மதுரை மாவட்டம், அரசினர் விருந்தினர் மாளிகையில் உள்ள கூட்டரங்கில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவிக்கையில்,
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் சில இடங்களில் கழிவுநீரை வெளியேற்றுவதற்கான தற்காலிகத் திட்டங்கள் குறித்து இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மதுரை மாநகராட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட ஆட்சியரும் மாநகராட்சி ஆணையாளரும் இணைந்து முழுமையான மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். விசாரணையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், மாநகராட்சியில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் விரிவான மதிப்பீடு மேற்கொள்ளப்பட உள்ளது. அதன் முடிவுகளின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரும் மாநகராட்சி ஆணையாளரும் உரிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.
மாநகராட்சியில் எந்தெந்த இடங்களில் விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்பது கண்டறியப்பட்டு, அதற்கேற்ப வழக்குகள் பதிவு செய்யப்படும். எங்கு ஊழல் அல்லது முறைகேடு நடைபெற்றிருந்தாலும் அவை விரைவாக அடையாளம் காணப்பட்டு முழுமையான விசாரணை நடத்தப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அடைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளில் சட்டவிரோதமாக பார்கள் செயல்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும்.
ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம் தொடர்பாக காவல்துறை முழுமையான விசாரணை மேற்கொண்டு வருகிறது. காணாமல் போன தரவுகள் என்னென்ன, அவற்றின் தன்மை என்ன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் தினந்தோறும் கண்காணித்து வருகிறார். திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க் மீட்கப்பட்டால், அதிலுள்ள தகவல்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எந்தெந்த தரவுகள் காணாமல் போயுள்ளன என்பது குறித்து விசாரணை நிறைவடைந்த பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்த விவகாரத்தில் யாரும் தப்பிக்க முடியாத வகையில் சட்டப்படி உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். என எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.கே.அரவிந்த், மாநகர காவல் துணை ஆணையர் (வடக்கு) எஸ்.மதிவாணன், மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) எஸ்.வனிதா, மாவட்ட வருவாய் அலுவலர் க.அன்பழகன், மாநகராட்சி துணை ஆணையாளர் ஜெய்னுலாப்தீன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) வானதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பார்த்திபன் உள்ளிட்ட வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, மின்சார வாரியம் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.