சென்னை,
பிரபல இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா, உலகின் முன்னணி யூடியூபரான மிஸ்டர் பீஸ்ட் நடத்திய பிரம்மாண்ட சவாலில் வெற்றி பெற்று சுமார் ரூ. 95 லட்சம் பரிசுத்தொகையை வென்றுள்ளார். தான் வென்ற இந்த முழுத் தொகையையும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் விலங்கு நல அமைப்புகளுக்கு அவர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
பிரபல யூடியூபரான மிஸ்டர் பீஸ்ட் அக்டோபர் மாத தொடக்கத்தில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்தார். இதையடுத்து அவர் தனது யூடியூப் சேனலுக்காக "Beat Professional Athlete, Win $100,000" என்ற தலைப்பில் ஒரு புதிய சவாலை ஏற்பாடு செய்திருந்தார். இதில் உலகளவில் பிரபலமான பல்வேறு விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இந்த சவாலின் ஒரு பகுதி, இந்தியாவின் கர்நாடக மாநிலம், சிக்கபள்ளாப்பூரில் உள்ள சாய் கிருஷ்ணன் கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்பட்டது.
இதில் பேஸ்பால் வீசுதல் சவாலில் பங்கேற்ற பிரபல இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா, துல்லியமாக இலக்கைத் தாக்கி அசாத்திய வெற்றி பெற்று $100,000 (சுமார் ரூ. 95 லட்சம்) பரிசுத்தொகையை வென்றுள்ளார். இந்த சவால் விளையாட்டு அடங்கிய முழு வீடியோ எடிட் செய்யப்பட்டு, கடந்த மாதம் 31-ம் தேதி அன்று மிஸ்டர் பீஸ்டின் யூடியூப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்திய யூடியூபர் கேரிமினாட்டியும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய ஹர்திக் பாண்டியா, "இந்த பரிசுத்தொகை எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், இதனை நான் என் சொந்தத் தேவைக்கு பயன்படுத்தப் போவதில்லை. ஏழை மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி, உணவு வழங்கவும், தெருநாய்களின் பராமரிப்பு மற்றும் விலங்கு நலனுக்காகவும் இந்த ரூ. 95 லட்சத்தையும் முழுமையாக நன்கொடையாக வழங்குகிறேன்" என்று அறிவித்தார்.
மைதானத்தில் அதிரடி காட்டுவது மட்டுமல்லாமல், நிஜ வாழ்விலும் தொண்டுள்ளத்தோடு சமூக நலனில் தனக்குள்ள அக்கறையை ஹர்திக் பாண்டியா வெளிப்படுத்தியிருப்பது ரசிகர்களிடையேயும் சமூக வலைதளங்களிலும் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.