கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

பெண்களின் பாதுகாப்புக்காக அறிவிக்கப்பட்ட சிங்கப்பெண் படை உறங்கிவிட்டதா? - வானதி சீனிவாசன் கேள்வி

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கோவையில், கோவை புதூர் பகுதியில் ஆள் நடமாட்டமில்லா இடத்தில் இளம்பெண் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கடந்த வாரம் அன்னூர் சாலையில் சாக்கு மூட்டையில் இளம்பெண் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள், மீண்டும் கோவையில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருப்பது பெண்களின் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

“எங்கெங்கு காணினும் சக்தியடா” என்று பெண்களின் பெருமையைப் பாடிய தமிழ்நாட்டில், இன்று “எங்கெங்கு காணினும் குற்றங்களடா” என்று சொல்லும் அளவிற்கு பெண்கள் மீதான கொடுமைகள் அதிகரித்திருப்பது தவெக ஆட்சியின் அவல நிலையின் உச்சம்.

முதல்வரே, “இப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம், சட்டம் ஒழுங்கை சரிசெய்ய நேரம் வேண்டும்” என்று இதற்கும் காரணம் கூறாதீர்கள். சட்டமன்றத்தில் விமர்சனங்களுக்கு சினிமா வசனம் போல ஆவேசமாக பதிலளித்த நீங்கள், பெண்கள் அனுதினமும் அனுபவிக்கும் அச்சத்திற்கும் கொடுமைகளுக்கும் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

பெண்களின் பாதுகாப்புக்காக பெருமையாக அறிவிக்கப்பட்ட சிங்கப்பெண் படை உறங்கிவிட்டதா? அல்லது வழக்கம் போல பத்தோடு பதினொன்றாக செயல்படத் தொடங்கிவிட்டதா? குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.