சென்னை
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தவெக அரசாங்கம் தொடர்ந்து அரசுக்கு எதிரான விமர்சனங்களை வைத்து ஆலோசனை சொல்பவர்களை அதிரடியாக கைது செய்வது ஜனநாயகத்தில் ஏற்புடையதல்ல. சமூக வலைதளங்களில் எதிர் கருத்து பதிவிடுபவர்களையும், அரசியல் மேடைகளில் அரசுக்கு எதிரான கருத்துக்களை பேசுபவர்களையும் அதிரடியாக கைது செய்வது என்பது ஆட்சியாளர்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை என்பதை காட்டுகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டுமல்ல சட்டமன்ற உறுப்பினர்களையும் கைது செய்வது தொடர் கதையாக இருக்கிறது. அரசியல்வாதிகளை மட்டுமில்லாமல் பத்திரிகையாளர்களையும் கைது செய்வதும், அலைக்கழிக்கப்படுவதையும் சர்வாதிகாரப் போக்காக பார்க்கப்படுகிறது. ஆனால் அதே சமயத்தில் குற்றம் செய்திருக்கின்ற ஆளுங்கட்சிக்காரர்கள் மீது வழக்கு போடாமல் இருப்பதையும், கைது செய்யாமல் இருப்பதையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
புதிதாக அமைந்திருக்கின்ற தமிழக அரசு ஆக்கப்பூர்வமான மக்கள் நலத்திட்டங்களை தீட்டுவதிலும், நடைமுறைப்படுத்துவதிலும் சுணக்கம் காட்டுவதை திசை திருப்புவதற்காக இதைப் போன்ற செயல்பாடுகள் செய்யப்படுகிறதா? சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன், பழனி மோசடி பத்திரப்பதிவை விமர்சித்தவர்களையும், தொழில்துறை அமைச்சர் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டியவர்களையும் கைது செய்வதன் மூலமாக எதிர்க்கட்சியில் இருக்கிற தலைவர்களுக்கு இந்த அரசை பற்றி எதுவும் பேசக்கூடாது என்று எச்சரிக்கை விடப்படுகிறதா? தனி மனிதர்களைப் பற்றி பேசினால் வழக்கு போடுங்கள் நீதிமன்றம் முடிவு செய்யட்டும். காவல்துறை அதிரடியாக சட்டமன்ற உறுப்பினர்களையும், பத்திரிகையாளர்களையும் கைது செய்வது எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதாக அமையும். முன்னாள் முதல்-அமைச்சரை பற்றி தனிப்பட்ட முறையில் எவ்வளவோ எதிர் கருத்துக்களை கடந்த காலங்களில் பேசியிருக்கிறார்கள் என்பதையும் அரசு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.