சென்னை,
தமிழகத்திற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் ஆந்திராவிற்கு சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பினால், ஆதாரங்களுடன் பதிலடி தர தயாராக இருப்பதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.
தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, தவெக சார்பில் பொது மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.
மருத்துவ முகாமினை தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் கீர்த்தனா சிவகாசியில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழக தொழில்துறை வளர்ச்சிக்காக தென்கொரிய நாட்டின் ஹூண்டாய் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய மறு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பிற சர்வதேச நிறுவனங்களிடமும் முதலீடு தொடர்பான ஒப்பந்தங்கள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஆட்சிக்கு வந்த சில நாட்களிலிலேயே ஏராளமான நிறுவனங்களை பார்த்து, தொழில் முதலீடு ஒப்பந்தம் செய்யும் அளவுக்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
தமிழகத்திற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள், ஆந்திராவிற்கு சென்றுவிட்டதாக கூறுவோருக்கு சட்டசபையில் தக்க பதிலடி அளிக்க தயாராக உள்ளேன். தொழில்துறை முதலீடுகள் என்பது நீண்ட செயலாக்கம்.
முதலீட்டிற்கான பல கட்ட செயலாக்கம் நடைபெறாமல், தாமதம் ஏற்பட்டதன் காரணமாகவே, தமிழகத்திலிருந்து வெளியே சென்றுள்ளனர். தமிழகத்தை விட்டு முதலீட்டாளர்கள் எதற்காக, எப்போது வெளியே சென்றார்கள் என்பது குறித்தான அனைத்து விவரங்களுடன் கூடிய ஆதாரங்கள் என்னிடம் தயாராக உள்ளன.
முன்னாள் ஆட்சியாளர்கள், அதிகாரிகளை கையில் வைத்துக்கொண்டு, தவெக ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
டிஆர்பி ராஜா இன்னமும் தன்னை தொழில் துறை அமைச்சராகவே நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். தயவுசெய்து மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அவரை வேண்டாம் என்று சொல்லிதான், டி.ஆர்.பி.ராஜாவை மக்கள் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.
உங்களது பண்ணையார் வாழ்க்கையை எல்லாம் விட்டுவிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான எங்களுக்கு மரியாதை கொடுங்கள்.
மக்களுக்கு நல்லது செய்வதற்காக ஆட்சிக்கு வந்துள்ள எங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் கீழ்த்தரமான குடைச்சலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்தும் உங்களுக்குத்தான் கேடாக முடியப்போகிறது.
5 ஆண்டுகள் மக்களை ஏமாற்றியதால்தான் அவர்கள் உங்களை தூக்கிப் போட்டு மாற்றம் என எங்களை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அதை மதிக்காமல் எங்களையும், மக்களையும் இழிவுபடுத்தும் வகையில் 'தற்குறி' என பேசுகிறீர்கள். இது எந்த வகையில் நியாயம்?
முன்னாள் ஆட்சியாளர்கள் அரசு அதிகாரிகளை கையில் வைத்துக்கொண்டு ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதையும் மீறி ஊழல் இல்லாத ஆட்சியை முதல-அமைச்சர் விஜய் கொடுத்துள்ளார். இதுதான் மக்கள் விரும்பிய மாற்றம்.
இவ்வாறு அவர் கூறினார்.