தமிழக செய்திகள்

ஆட்டோ ஓட்டுநர்களின் குரல், ஆட்சியாளர்களின் செவிகளுக்கு எட்டவில்லையா? - வேல்முருகன் கேள்வி

ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தினார்.

சென்னை,

வாழ்வாதாரம் கேட்டுப் போராடும் ஆட்டோ ஓட்டுநர்களின் குரல், ஆட்சியாளர்களின் செவிகளுக்கு எட்டவில்லையா? என வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர்கள் தத்தளிப்பு

இது தொடர்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முகமது இப்ராகிம், தனது ஆட்டோவின் தகுதிச் சான்றிதழ் (FC) புதுப்பிப்பதற்காகப் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

ஓர் உழைப்பாளி தனது தொழிலைத் தொடர்ந்து நடத்துவதற்காகவே கடன் பெற வேண்டிய அவல நிலை நிலவுகிறது. ஆனால், அந்தக் கடனை அடைப்பதற்கான வருவாய் தொழிலில் கிடைப்பதில்லை. மறுபுறம், வாகனத் தகுதிச் சான்று (FC), காப்பீடு, வாகனப் பராமரிப்பு, எரிபொருள் உள்ளிட்ட செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.

குறிப்பாக, பன்னாட்டு கார்ப்பரேட் மற்றும் அந்நிய நிறுவனங்களின் செயலி வழி (Online Aggregators) போக்குவரத்து ஆதிக்கத்தால் ஆட்டோ ஓட்டுநர்களின் தினசரி வருமானம் கடுமையாகச் சரிந்துள்ளது. உள்ளூர் தொழிலாளர்களின் உழைப்பையும் வாழ்வாதாரத்தையும் இந்த அந்நிய நிறுவனங்கள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி உறிஞ்சிச் சுரண்டுகின்றன. இத்தகைய ஆன்லைன் நிறுவனங்களின் தீவிரப் போட்டியாலும் கட்டணச் சுரண்டலாலும் எளிய ஆட்டோ ஓட்டுநர்கள் அன்றாடப் பிழைப்பிற்கே வழியின்றித் தத்தளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட பிரச்சினை அல்ல

உழைப்பின் மூலம் கிடைக்கும் வருவாய்க்கும், வாழ்க்கை மற்றும் தொழில் சார்ந்த செலவுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்தச் சமநிலையின்மைக்கு யார் பொறுப்பு? ஆட்டோ ஓட்டுநர்கள் நகரங்களின் அன்றாடப் போக்குவரத்தின் முதுகெலும்பாக விளங்குகின்றனர். ஆனால், அவர்களின் உழைப்புக்குரிய பொருளாதாரப் பாதுகாப்பை உருவாக்குவதற்குப் பதிலாக, பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலும் தொழிலைத் தொடர்வதற்கான கடன் சுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

இது முகமது இப்ராகிம் என்ற ஒருவரின் குடும்பத்தை மட்டும் பாதிக்கும் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் அடிப்படைப் பொருளாதாரச் சிக்கல். ஓர் ஆட்டோ ஓட்டுநர் தனது வாகனத்தைப் புதுப்பித்துச் சாலையில் இயக்குவதற்கே கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால், அந்தத் தொழிலாளியின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் அரசின் கொள்கைகள் எங்கே போயின?

அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

பன்னாட்டுச் செயலி நிறுவனங்களை முறைப்படுத்தவும், உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்களின் நலனைக் காக்கவும் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அரசு இன்னும் எத்தனை உயிரிழப்புகளுக்காகக் காத்திருக்கிறது? முகமது இப்ராகிமின் உயிரிழப்பு வெறும் இரங்கல் செய்தியுடன் கடந்து செல்லக்கூடிய ஒன்றல்ல. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக அரசு ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதார நெருக்கடி குறித்து அவசரமாக ஆய்வு செய்து, பன்னாட்டு நிறுவனங்களின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தி, ஓட்டுநர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நிரந்தரக் கொள்கையை வகுக்க வேண்டும்.

முகமது இப்ராகிம் குடும்பத்திற்கு உடனடி நிவாரணமும், அக்குடும்பத்தின் எதிர்கால வாழ்வாதாரத்திற்கான உரிய பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும். அந்நியப் பன்னாட்டு ஆன்லைன் நிறுவனங்களின் கட்டணச் சுரண்டலை முறைப்படுத்தி, தமிழக அரசே பிரத்யேகமாக ஆட்டோக்களுக்கான அரசு செயலியைத் திறம்படச் செயல்படுத்த வேண்டும்.

ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களின் பிரதிநிதிகளைத் தமிழக அரசு உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நடைமுறைத் தீர்வு காண வேண்டும்.

இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக வேண்டும்? ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT