சென்னை,
"வேலைக்காரன்" படத்தில் நடிகர் ரஜினிகாந்த், "தோட்டத்தில பாத்தி கட்டி பாத்திருக்கேன்.. பாத்திருக்கேன்.. சோற்றுக்குள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே.." என்று ஒரு பாடல் பாடியிருப்பார்.
அதுபோல, ஆற்றுக்குள் குளத்தை வெட்டிய கதை ஒன்று தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. அதுவும் தலைநகர் சென்னை அருகே உள்ள காஞ்சீபுரம் மாவட்டத்தில்தான் அரங்கேறியிருக்கிறது.
காஞ்சீபுரம் அருகே வேகவதி ஆற்றுக்குள் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏற்கனவே குளம் வெட்டப்பட்டு சேதமடைந்துள்ள நிலையில், தற்போது அதே இடத்தில் மீண்டும் குளம் வெட்டும் பணி நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதாவது, காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட முத்தியால்பேட்டை ஊராட்சியில், வேகவதி ஆற்றில் தற்போது குளம் வெட்டும் பணி நடந்து வருகிறது. ஆற்றுக்குள்ளேயே குளத்தை வெட்டுவது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு இதே ஆற்றுப்பகுதியில் ரூ.9 லட்சத்து 65 ஆயிரம் செலவில் குளம் ஒன்று வெட்டப்பட்டது. ஆனால், ஆற்றில் இயல்பான நீரோட்டத்தின்போது அந்த குளம் பெருமளவில் சேதமடைந்தது.
இந்த நிலையில், அந்த இடத்தின் அருகிலேயே மீண்டும் 125 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை பயன்படுத்தி, புதிய குளம் வெட்டும் பணி தொடங்கியிருக்கிறது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றில் மழைக்காலத்தில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடி வரும் என்பது தெரிந்தும், அதே இடத்தில் மீண்டும் அரசு நிதியை செலவழித்து குளம் அமைப்பது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
விதி மீறல் இருந்தால் நடவடிக்கை
வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் பகுதியில் மீண்டும் மீண்டும் குளம் வெட்டுவது மக்களின் வரிப் பணத்தை வீணடிக்கும் செயலாகும். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல இடங்களில் 125 நாள் திட்ட பணிகள் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.
குளம் வெட்டும் திட்டம் உண்மையான பயனாளிகளுக்காக இல்லாமல், நிதியை செலவிட்டதாக கணக்கு காட்டும் திட்டமா என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, அனுமதி வழங்கிய அதிகாரிகள், தொழில்நுட்பத்தை ஆய்வு செய்த பொறுப்பாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் கூறும்போது, "குளம் வெட்டப்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட பொறியாளர்களுடன் ஆலோசித்து, விதிமீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.