தமிழக செய்திகள்

பாடப்புத்தகங்கள் கிடைப்பதில் சிக்கலா? - என்.சி.இ.ஆர்.டி. விளக்கம்

1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு அனைத்துப் பாடப்புத்தகங்களும் தற்போது டிஜிட்டல் மற்றும் அச்சு வடிவங்களில் கிடைக்கின்றன.

சென்னை,

இந்தியாவில் புதிய தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படையில், "பள்ளிக்கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு" உருவாக்கப்பட்டு பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. 2024-25-ம் கல்வியாண்டில் இருந்து தொடர்ந்து பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு வரும் சூழலில், நடப்பாண்டில் 9-ம் வகுப்புக்கு மட்டும் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டன.

புத்தகங்கள்

இந்த சூழலில் நடப்பாண்டுக்கான வகுப்புகள் தொடங்கிய நிலையில் இன்னும் சில புத்தகங்கள் கிடைப்பதில் சிக்கல்கள் இருப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதற்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) விளக்கம் அளித்திருக்கிறது. இதுதொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு 2023-ன் படி இந்த புதிய பாடப்புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு அனைத்துப் பாடப்புத்தகங்களும் தற்போது டிஜிட்டல் மற்றும் அச்சு வடிவங்களில் கிடைக்கின்றன. 9-ம் வகுப்புக்கான பாடப்புத்தகங்களும் வெளியிடப்பட்டுவிட்டன; அவற்றில் சமூக அறிவியல் மற்றும் கணிதப் பாடப்புத்தகங்களின் இரண்டாம் பாகங்கள் தவிர மற்றவை கிடைக்கின்றன. இந்த புத்தகங்களும் ஆகஸ்டு மாதத்திற்குள் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.