சென்னை,
அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், "கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது என்னை கொல்ல எதிர்க்கட்சியினர் முயற்சித்தனர். அப்போது எனது சகோதரரும், மைத்துனரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்குப் பின், எனக்கும், எனது வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் 2021-ம் ஆண்டு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அச்சுறுத்தல் உள்ளதால் பாதுகாப்பு வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டிருந்தது. தற்போது தொடர்ச்சியாக மிரட்டல்கள் வருவதால் இதுசம்பந்தமாக சென்னை, விழுப்புரம் மாவட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுதொடர்பான வழக்குகளையும், புகார்களையும் சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்துள்ள உத்தரவில், "தொடர்ச்சியாக மிரட்டல்கள் வருவது குறித்து வெவ்வேறு விதமான குற்றச்சாட்டுகளுடன் சி.வி.சண்முகம் புகார் அளித்துள்ளதால் அதனை சிபிஐக்கு மாற்ற வாய்ப்பில்லை.
தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வருவதால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய தேவையை சி.வி.சண்முகம் நிரூபித்துள்ளார். எனவே அவருக்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பை டிஜிபி வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.