டாஸ்மாக் முறை கேடு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அதிரடி சோதனையும் நடைபெற்றது.இந்த நிலையில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று காலை 11 மணியளவில் ஆஜர் ஆனார். அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி கூறியதாவது: -தவெக அரசு அமைந்த பிறகு ஆட்சி நடத்துவதை விட எதிர்க்கட்சிகள் மீது வழக்கு பதிவு செய்வதில் தான் சிறப்பு கவனங்களை செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் ஒரு வழக்கல்ல 10 வழக்குகள் அல்ல எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை சந்திப்பதற்கும் , சட்டப்படி எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
நான் நேற்று என்ன கேட்டேன். மின்சாரத்துறை அமைச்சரிடம் 18 ஹார்ட் டிஸ்க் காணாம போயிடுச்சு கண்டுபிடிச்சது 38 ஹார்ட் டிஸ்க்ன்னு சொன்னீங்க மீதி இருக்கற 20 ஹார்ட் டிஸ்க் எங்க இருந்து கண்டுபிடிச்சது உரிய விளக்கம் என்ன.? என கேள்வி கேட்டா அது கடைசி வரைக்கும் அவர் பதிலே சொல்லல.ஒரு கேள்விக்கு பதில் தெரியாமல் சட்டமன்றத்தில் பதிலளிக்க திறமை இல்லாமல் திராணி இல்லாமல் இதுபோன்ற குதர்க்கமான வார்த்தைகளை பயன்படுத்தி சட்டமன்றத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். உரிய நேரத்தில் மக்கள் அவர்களுக்கு உரிய பதிலை தருவார்கள். இந்த ஆட்சி 100 நாள் கடந்து போயிருக்கு மக்களுக்கு எந்தவிதமான ஒரு பயனும் இல்லாத அரசாக இந்த தவெக அரசு உள்ளது” என்றார்.