தமிழக செய்திகள்

முகப்பு விளக்கு பழுது: செல்போன்கள் வெளிச்சத்தில் சென்ற அரசு பேருந்து

செல்போன்கள் டார்ச் வெளிச்சத்தில் சிங்கம்புணரியில் இருந்து திருப்பத்தூருக்கு அரசு பேருந்தை ஓட்டிச்சென்ற அவலம் ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு பல்வேறு ஊர்களில் இருந்து அரசு டவுன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக திருப்பத்தூர், மேலூர், நத்தம், துவரங்குறிச்சி, பொன்னமராவதி பனிமனைகளில் இருந்து அரசு பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிமனைகளில் ஒரு சில அரசு பேருந்துகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. மழைநீர் ஒழுகுவதும், முகப்பு விளக்குகள் எரியாமல் போவதும் அவ்வப்போது நடக்கின்றன. இதனால் பயணிகள் அவதி அடைகிறார்கள்.

இந்த நிலையில் திருப்பத்தூர் பணிமனையை சேர்ந்த அரசு டவுன் பேருந்து ஒன்று, நேற்று முன்தினம் இரவில் சிங்கம்புணரியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்து அ.காளாப்பூர், சதுர்வேதமங்கலம், மருதிப்பட்டி வழியாக தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூர் செல்லக்கூடியது.

இந்த பேருந்து பயணிகளுடன் புறப்பட்டபோது முகப்பு விளக்கு ஒளிரவில்லை. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இருட்டில் பேருந்தை நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தாலும் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் பேருந்தை எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர். இதனால் பயணிகள் சிலரும், கண்டக்டரும் செல்போன்களில் உள்ள டார்ச் லைட்களை ஒளிரவிட்டதால் அதில் கிடைத்த வெளிச்சத்தில் நத்தை போல் நகர்ந்து அந்த பேருந்து சென்று ஒரு வழியாக திருப்பத்தாரை அடைந்துள்ளது.

இதுபோன்று டார்ச் லைட் வெளிச்சத்தில் ஓட்டிச் சென்றது விபத்துக்கு வழிவகுத்து இருக்கும். நல்ல வேளையாக அது போல் எதுவும் நடக்கவில்லை என பயணிகள் தெரிவித்தனர். எனவே திருப்பத்தூர் பணிமனை நிர்வாகம் ஓட்டை உடைசல் பேருந்துகளை மாற்றி நல்ல நிலையில் உள்ள பேருந்துகளை இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் பரபரப்பையும், அப்பகுதியில் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.