சென்னை,
வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கக் கூடிய சூழலில், பருவமழை காலகட்டத்தில் ஏற்படக்கூடிய காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட சுகாதாரத்ததுறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்ததுறை இயக்குநர் வழங்கியுள்ளார்.
அந்த வகையில், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் அவ்வப்போது ஆய்வு நடத்தி கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக புதர்கள், களைச்செடிகளை அகற்றி வளாகங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும், குப்பைகளை முறையாக பிரித்து அகற்றுவதோடு, எலிகள் மற்றும் பிற உன்னிகளிடம் இருந்து பரவக்கூடிய நோய் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், கழிப்பறைகளை சுத்தமாக பராமரிப்பதோடு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், நீர் சேமிப்பு டேங்குகள் உள்ளிட்டவற்ற முழுமையாக மூடி வைத்து, குடிநீர் மாசுபடுவதை தவிர்க்கக்கூடிய வகையில அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகளில் இருப்பவர்கள் காய்ச்சல் அல்லது நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்றும், ஒரே பகுதியில் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க மாவட்ட கலெக்டர் தலைமையில் பல்வேறு அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் எனவும் ஆய்வுகளின்போது கண்டறியப்படக்கூடிய குறைபாடுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்காலம் முழுவதும் இந்த நடவடிக்கைகளை தொடர்வதோடு மட்டுமல்லாமல், ஆய்வு விவரங்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட அளவில் பதிவேடுகளை பராமரிக்க வேண்டும் என மாவட்ட சுகாதாரத்ததுறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்ததுறை உத்தரவிட்டுள்ளது.