சென்னை,
கடந்த திமுக ஆட்சியின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டார். அன்பில் மகேஷை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வரும் நவம்பர் 6 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதி உத்தரவையடுத்து இரவோடு இரவாக அன்பில் மகேஷ் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். முதல் வகுப்பு சிறையில் அன்பில் மகேஷ் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, தனக்கு ஜாமீன் கோரி , சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் மனுத்தாக்கல் செய்து இருந்தார். அதில் நான் லஞ்சம் வாங்கியதாக எந்த ஆதாரமும் இல்லை, லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்களை போலீசார் தாக்கல் செய்யவில்லை. ஆதாரங்கள் இன்றி நான் கைது செய்யப்பட்டு இருக்கிறேன். போலீசார் விசாரணைக்கு அழைத்தபோது நேரில் ஆஜராகி முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன். நான் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு தொடர் மருத்துவ கண்காணிப்பு தேவைப்படுகிறது. எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.” என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்பில் மகேஷ் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க தங்கள் தரப்புக்கு அவகாசம் வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணையை வரும் 2 ஆம் தேதிக்கு கோர்ட் ஒத்திவைத்துள்ளது. அதேபோல, அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு மீதான விசாரனையும் அன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.