தமிழக செய்திகள்

உஸ்பெகிஸ்தான் இதயங்களில் திருக்குறளை விதைத்த பிரதமருக்கு நெஞ்சார்ந்த நன்றி! - நயினார் நாகேந்திரன்

தமிழின் ஞானச்செறிவை ஆசிய நாடுகளுக்குக் கொண்டு செல்லும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சி என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சென்னை,

உஸ்பெகிஸ்தான் இதயங்களில் திருக்குறளை விதைத்த பிரதமருக்கு நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சி

கடல் கடந்து செல்லும் தமிழின் நறுமணமாய், திசை எட்டும் பரவும் உலகப் பொதுமறையாம் திருக்குறளின் புகழை, உஸ்பெகிஸ்தான் மண்ணில் ஓங்கி ஒலிக்கச் செய்திருக்கிறார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.

தாஷ்கண்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், “திருக்குறள் இன்றும் வாழ்வியலின் அனைத்துத் துறைகளுக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்வதாகப் பேசிய பிரதமர் மோடி, ஆன்மிகம், தத்துவம் மற்றும் நடைமுறை அறிவு பொதிந்த திருக்குறளை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்க விடுத்த வேண்டுகோள், தமிழின் ஞானச்செறிவை மத்திய ஆசிய நாடுகளின் இதயங்களுக்குக் கொண்டு செல்லும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியாகும்.

நெஞ்சார்ந்த நன்றிகள்

காசி தமிழ்ச் சங்கமம் முதல் நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது வரை, தமிழுக்கு புகழ் சேர்த்து வரும் பிரதமரின் செயல் போற்றுதலுக்குரியது. ஏற்கனவே பல இந்திய மற்றும் உலக மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளதோடு, வள்ளுவத்தின் வாய்மையை வையகமெங்கும் கொண்டு செல்லும் பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய முயற்சிகளுக்குத் தமிழக மக்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT