தமிழக செய்திகள்

வெப்பத் தணிப்புத் திட்டம்: ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை..!

இக்கூட்டம் நகர்ப்புற வெப்பத்தைக் குறைப்பதற்கான கூட்டு முயற்சிகளை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு நடைபெற்றது.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், தலைமையில் நகர்ப்புற வெப்பத் தணிப்புத் திட்டம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP- United Nation Environment Programme) பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (09.09.2026) ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

வெப்பத்தைக் குறைக்க முயற்சி

இக்கூட்டம் சென்னையில் நகர்ப்புற வெப்பத்தைக் குறைப்பதற்கான கூட்டு முயற்சிகளை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் அமைப்பின் திட்ட மேலாளர் பெஞ்சமின் ஹிக்மேன் (UNEP Programme Manager - Benjamin Hickman), மூத்த ஆலோசகர்கள் ஆர்த்தி நைன் (Aarti Nain), துர்கானந்த் பல்சாவர் (Durganand Balsavar), மணிகண்டன் பரமேஸ்வரன் (Manikandan Parameswaran), ஆரோவில் கன்சல்டிங் அமைப்பின் திட்ட மேலாண்மை குழுவினர் (Project Management Unit from Auroville Consulting Team) மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

நிலையான குளிர்ச்சி முறை

செயற்கை ஆற்றலைச் சாராத குளிர்ச்சி தீர்வுகள் (Passive Cooling Solutions - PCS) மற்றும் இயற்கை சார்ந்த தீர்வுகளை (Nature-based Solutions - NbS) ஒருங்கிணைப்பதன் மூலம் சென்னை முழுவதும் நிலையான குளிர்ச்சி முறைகளைச் செயல்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிவதில் இக்கூட்டம் கவனம் செலுத்தியது. விவாதிக்கப்பட்ட முக்கிய முன்னுரிமைப் பகுதிகள் பின்வருமாறு:

· இயற்கை சார்ந்த தீர்வுகள் (NbS) மற்றும் பசுமை உள்கட்டமைப்பு: நகரத்தில் அதிக வெப்பம் பதிவாகும் பகுதிகளில் நிழல் தரும் நடைபாதைகள், நீர் ஊடுருவும் பரப்புகள் மற்றும் நகர்ப்புற பசுமையாக்குதல் திட்டங்களை ஒருங்கிணைத்தல்.

· பசுமைப் பள்ளிகளுக்கான PCS மறுசீரமைப்பு: சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள 'குளிர்ந்த கூரை' (Cool Roof) திட்டங்களை விரிவுபடுத்துவதுடன், PCS நுட்பங்கள் மூலம் பள்ளிகளை மறுசீரமைத்தல்.

· பெருநகர சென்னை மாநகராட்சி PCS வழிகாட்டுதல்கள் மற்றும் வெப்பநிலைக் தரநிலைகள்: அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் பொது உள்கட்டமைப்புகளுக்கு ஏற்ற காலநிலைக்கேற்ற கட்டட வடிவமைப்பு மாதிரிகள், வெப்ப வசதி தரநிலைகள் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை வழங்குதல்.

· டிஜிட்டல் கருவிகள் மற்றும் திட்டமிடல்: ஆதாரப்பூர்வமான நகர்ப்புற திட்டமிடலுக்கு ஆதரவளிக்கும் வகையில், சென்னை மாநகராட்சியின் 'டிஜிட்டல் ட்வின்' (Digital Twin) திட்டத்தில் நிகழ்நேர நுண்காலநிலை மாதிரியாக்கத்தைச் (Real-time microclimate modelling) சேர்த்தல்.

· மாவட்ட குளிர்ச்சி அமைப்புகள் (District Cooling Systems): புதிய மற்றும் மறுசீரமைக்கப்படும் சென்னை மாநகராட்சி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மாவட்ட குளிர்ச்சி மற்றும் 'சேவையாக குளிர்ச்சி' (Cooling-as-a-Service - CaaS) மாதிரிகளின் சாத்தியக்கூறுகளை மதிப்பிடுதல்.

இந்த கூட்டு முயற்சியானது, காலநிலைக்கு ஏற்ற நகர்ப்புற வளர்ச்சிக்கான பெருநகர சென்னை மாநகராட்சியின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துவதோடு, அளவிடக்கூடிய மற்றும் ஆதாரப்பூர்வமான வெப்பத் தணிப்பு உத்திகளைச் செயல்படுத்துவதில் சென்னையை ஒரு முன்னோடி நகரமாக உயர்த்திடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT