சென்னை
சென்னையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள சூழலில், அதிகாலையில் திடீரென மழை வெளுத்து வாங்கியது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோர பகுதிகளின் மேல் சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதன்படி, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதேபோன்று, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட 15 மாவட்டங்களில் தீபாவளி பண்டிகையையொட்டி மித அளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அதிகாலை 3 மணியளவில் சென்னையில் பரவலாக மழை பெய்தது.
சென்னையின் வேப்பேரி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், எழும்பூர், பூந்தமல்லி, பெரியமேடு, சென்டிரல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. ஏறக்குறைய அரை மணிநேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.