சென்னை,
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெளிவாகத் தெரியாத நிலை ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
குறிப்பாக அதிகாலை நேரங்களில் சாலைகள் முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் இருசக்கர வாகனங்கள், கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டிச் சென்றவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாகச் சென்றனர்.
மேலும், சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள அறிவிப்பு பலகைகள் சரிவரத் தெரியாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பனிமூட்டம் காரணமாக அதிகாலை நேரங்களில் வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பனிமூட்டம் விலகிய பின்னரே சாலைகளில் இயல்பான நிலை திரும்பியது.
பனிமூட்டம் நிலவும் நேரங்களில் வாகன ஓட்டிகள் வேகத்தைக் குறைத்து, முகப்பு விளக்குகளை எரியவிட்டு பாதுகாப்பாகச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.