நெல்லை,
தென்மேற்கு பருவமழை நெல்லை, தென்காசி மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக பெய்து வருகிறது.நகர் பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. ஆனால் அணை பகுதிகளில் மட்டுமே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு வாரமாகவே கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று காலை 80.70 அடியாக இருந்த அணை நீர்மட்டம் இன்று 4 அடி உயர்ந்து 84½ அடியை எட்டி உள்ளது. அணை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2 ஆயிரத்து 800 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 103.31 அடியாக உயர்ந்த நிலையில் இன்று சுமார் 4 அடி உயர்ந்து 107 அடியை கடந்துள்ளது. 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று 71 அடியாக இருந்தது. இன்று 1½ அடி உயர்ந்து 72½ அடியாகி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,200 கனஅடி வீதம் நீர்வரத்து உள்ளது.கடந்த வாரம் இதே நாள் பாபநாசம் அணை நீர்மட்டம் 49 அடி மட்டுமே இருந்தது. ஒரு வாரத்தில் அந்த அணை நீர்மட்டம் 35 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சேர்வலாறு அணை நீர்மட்டம் கடந்த வாரம் இதே நாளில் 63 அடியாக இருந்தது. இந்நிலையில் கடந்த 1 வாரத்தில் சுமார் 44 அடி உயர்ந்து அந்த அணை 107 அடியை கடந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை தொடர்வதால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்று 7-வது நாளாக தடை நீடிக்கிறது. அதேநேரம் அருவியை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் களக்காடு தலையணையில் குளிக்கவும், நம்பி கோவில் செல்லவும் தடை நீடிக்கிறது.மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 24 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 9 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடனாநதி அணையின் நீர்மட்டம் நேற்று 48½ அடியாக இருந்தது. இன்று 4½ அடி உயர்ந்து 52.80 அடியை எட்டியுள்ளது. ராமநதி அணையின் நீர்மட்டம் இன்று 4 அடி உயர்ந்து 56 அடியை எட்டியுள்ளது. கருப்பாநதி அணையின் நீர்மட்டம் நேற்று 45 அடியை கடந்த நிலையில் இன்று மேலும் 2 அடி உயர்ந்து 47 அடியை கடந்துள்ளது.குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36 அடியை இன்று காலை எட்டி நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடவிநயினார் அணையின் நீர்மட்டம் நேற்று 67½ அடியாக இருந்த நிலையில் இன்று 3½ அடி உயர்ந்து 71 அடியை கடந்துள்ளது.