நெற்பயிர்கள் சேதம் 
தமிழக செய்திகள்

திருவாரூரில் கனமழை: அறுவடைக்குத் தயாரான 2,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

விவசாயிகள், இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்,

திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த திடீர் கனமழை காரணமாக, அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 2,000 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி கடுமையான சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

2 நாட்கள் பெய்த கனமழை

திருவாரூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 நாட்கள் தொடர்ந்து கனமழை பெய்தது. இதையடுத்து நன்னிலம், குடவாசல், கலக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 2,000 ஏக்கர் குருவை நெற்பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கின. இன்னும் சில தினங்களில் அறுவடை செய்யப்படவிருந்த நிலையில், வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற முடியாததால் நெற்கதிர்கள் அழுகி, முளைக்கத் தொடங்கியுள்ளன.

விவசாயிகள் வேதனை-.கோரிக்கை

ஏக்கருக்குப் பல்லாயிரக்கணக்கில் செலவு செய்து, அறுவடை நேரத்தில் பெய்த இந்த மழையால் தங்களுக்குப் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட விளைநிலங்களை வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT