கணேசபுரம் சுரங்கப்பாதை 
தமிழக செய்திகள்

வியாசர்பாடியில் கனமழை: குளம்போல் மாறிய கணேசபுரம் சுரங்கப்பாதை!

இதனால் அப்பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சென்னை,

சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையினால், வடசென்னையின் முக்கிய போக்குவரத்து இணைப்பான வியாசர்பாடி கணேசபுரம் ரெயில்வே சுரங்கப்பாதை முழுவதும் வெள்ள நீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது.

நள்ளிரவு பெய்த கனமழை

சென்னையில் வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை வரை விடிய விடிய அதிதீவிர கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த முதல் கட்ட பருவமழைக்கே வடசென்னையின் பல்வேறு பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையில் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது.

நீடிக்கும் மேம்பாலப் பணிகள்

கணேசபுரம் சுரங்கப்பாதை பகுதியில் ரூ.226 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் மற்றும் பாக்ஸ் கல்வெர்ட் வடிகால் அமைக்கும் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. இந்த உள்கட்டமைப்பு பணிகள் இன்னும் முழுமையடையாத காரணத்தினால், பெய்த கனமழை நீர் வெளியேற வழியின்றி சுரங்கப்பாதைக்குள் பெருமளவில் தேங்கியதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

போக்குவரத்து மாற்றம்- மக்கள் அவதி

சுரங்கப்பாதை மூடப்பட்டதைத் தொடர்ந்து, அவ்வழியாகச் செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் மற்றும் கல்யாணபுரம் மேம்பாலம் ஆகிய மாற்றுப் பாதைகள் வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மாநகராட்சி தீவிர நடவடிக்கை

சென்னையிலுள்ள மற்ற 21 சுரங்கப்பாதைகளிலும் தேங்கிய மழைநீர் உடனுக்குடன் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரான நிலையில், கணேசபுரம் பகுதியில் மட்டும் தேங்கியுள்ள வெள்ளநீரை அகற்ற சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். கூடுதல் திறன் கொண்ட ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT