கள்ளக்குறிச்சி,
வெளுத்து வாங்கிய கனமழையால் வீடுகளுக்கு மழைநீர் சூழ்ந்து மக்கள் அவதிக்குள்ளாகினர்.
கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய பயங்கர கனமழை பெய்தது. இதனால் அப்பகுதியின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் கனமழையின் காரணமாக வடசெட்டியந்தல் கிராமத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும், அங்குள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்ததோடு மட்டுமல்லாமல், வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் எங்குச் செல்வது என்று தெரியாமல், இரவு முழுவதும் தூக்கமின்றி கடும் அவதிக்குள்ளாகினர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.