சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அந்தமான் அருகே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக் கூடும் எனவும், அடுத்து உருவாகும் புயலுக்கு ‘அர்னாப்’ என பெயர் வைக்கப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோவை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 7 மாவட்டங்களில் இடி, மின்னல் தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர், ஈரோடு, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் தாக்கும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.