சென்னை,
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், “சுமார் 4.5 கிமீ முதல் 5.8 கிமீ உயரம் வரை வட தமிழக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 1.5 கிமீ உயரம் வரை கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை, ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
சுமார் 5.8 கிமீ உயரம் வரை லட்சத்தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 1.5 கிமீ முதல் 3.1 கிமீ உயரம் வரை லட்சத்தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, கேரளா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதிகாலை 4 மணி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம். கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.