தமிழக செய்திகள்

கனமழை: திருச்செந்தூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கடும் வெயில் மக்களை வாட்டியது. இதனால் இந்த ஆண்டு பருவமழை பெய்யுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவியது.

இதற்கிடையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்பட பல்வேறு மாவட்டங் களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

அதன்படி நேற்று அதிகாலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பரமன்குறிச்சி, காயாமொழி, ஆலந்தலை, கல்லாமொழி, நா.முத்தையாபுரம், நடுநாலுமூலைகிணறு, கீழநாலுமூலைகிணறு, வீரபாண்டியன்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை பரவலான மழை பெய்தது.

இந்த மழையால் திருச்செந்தூர் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் மழைநீர் சாலையில் தேங்கியது. தாழ்வான குடியிருப்புகளையும் மழைநீர் சூழ்ந்தது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கிரிபிரகாரம் உள்ளிட்ட பகு திகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் பக்தர்கள் அவதி அடைந்தனர்,

இந்த நிலையில், கனமழை காரணமாக திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (வியாழக்கிழமை) ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கனமழையால் பள்ளிகளில் மழைநீர் தேங்கிய நிலையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT