தமிழக செய்திகள்

8 மாவட்டங்களில் இன்று காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் வாட்டி வதைத்தாலும், கடந்த 2 தினங்களாக வெப்பசலன மழை ஆங்காங்கே பெய்கிறது. சில இடங்களில் சூறைக் காற்றுடன் மழை கொட்டுகிறது. வால்பாறை உள்ளிட்ட ஓரிரு இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. பொதுவாக கோடை காலத்தில் பகலில் வெயில் கொளுத்தும், மாலை அல்லது இரவில் மழை வெளுத்து வாங்கும்.

அந்தவகையில் தற்போது கோடை மழை பெய்கிறது. இதன் தொடர்ச்சியாக தெற்கு ஒடிசா முதல் மன்னார் வளைகுடா வரை, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று (சனிக்கிழமை) முதல் 4-ந்தேதி (திங்கட்கிழமை) வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.