தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் கனமழையால் உப்பளங்களில் தண்ணீர் தேக்கம்... உற்பத்தியாளர்கள் கவலை

25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடையை மிஞ்சும் வகையில் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 1 மணி முதல் இன்று காலை வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து, மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளங்கள் வறண்டு காணப்பட்டன. இதனால் விவசாய பணிகளில் ஈடுபட முடியாமல் விவசாயிகள் அவதியடைந்தனர். மேலும், பாபநாசம் அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் கூடுதல் தண்ணீரை திறந்துவிடக்கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

கனமழை

இந்த நிலையில் பெய்த மழை, சுமார் 2,000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், வயல்வெளி பகுதிகளில் தூறல் மழையாகவே பெய்து நின்றுவிட்டது. அதே நேரத்தில், தூத்துக்குடி கடலோர பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் அமைந்துள்ள உப்பளங்கள் முழுவதும் மழைநீரில் மூழ்கின. இதனால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உப்பு உற்பத்தியாளர்கள் கவலை

உப்பளங்கள் மழைநீரில் மூழ்கியதால், உப்பு உற்பத்தியை நம்பியுள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர். பழையகாயல், புல்லா வெளி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், மீண்டும் உப்பு உற்பத்தியை தொடங்குவதற்கு சுமார் ஒரு மாத காலம் ஆகும் என்று உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டியுள்ள முள்ளக்காடு பகுதியில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்யாமல் இருந்தால், உப்பளங்களில் தேங்கியுள்ள தண்ணீர் வற்றி மீண்டும் உப்பு உற்பத்தியை தொடங்க முடியும் என்றும் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். இதனால் தூத்துக்குடி கடலோர பகுதிகளில் பெய்த கனமழை, உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT