தேனி,
தேனி மாவட்டம் வருசநாடு வனப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, வைகை ஆற்றின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான மூலவைகை ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையின் வெள்ளிமலை, மேகமலை மற்றும் வருசநாடு வனப்பகுதிகளில் பெய்த பலத்த மழையால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வருசநாடு, வாலிபாறை, தும்மக்குண்டு, சிங்கராஜபுரம் மற்றும் காந்தி கிராமம் ஆகிய கரையோரப் பகுதிகளின் வழியாகப் பாயும் மூலவைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஆற்றில் இன்று (வியாழக்கிழமை) நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ அல்லது ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறையினர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மூலவைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள இந்த நீர்வரத்து அதிகரிப்பு வைகை அணைக்குப் புதிய நீரைக் கொண்டு சேர்க்கும் என்பதாலும், அப்பகுதி மக்களின் குடிநீர்த் தேவை மற்றும் விவசாயப் பாசனத்திற்கு பெரிதும் உதவும் என்பதாலும் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.