வேதாரண்யம்,
வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி ஆண்டு தோறும் நடைபெறுகிறது. சிறு உப்பு உற்பத்தியாளர்கள் சுமார் 850 பேர் 3ஆயிரம் ஏக்கரில் உணவு உப்பு தயார் செய்து வருகின்றனர். மீதம் உள்ள 6 ஆயிரம் ஏக்கரில் கோடியக்காடு. கடினல்வயல் பகுதிகளில் தொழிற்சாலைக்கு தேவையான உப்பை 2 பெரிய நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன.
ஆண்டுதோறும் இங்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு லாரி மூலம் மட்டுமே அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி கடந்த ஜனவரி மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. ஜனவரி முதல் மே மாதம் வரை 3 முறை மழை பெய்ததால் உப்பு உற்பத்தி தடைப்பட்டது. கடந்த வாரம் 2 முறை பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்க 1 வாரம் ஆகும் என்பதால் உப்பளத்தில் வேலை பார்த்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாததால் உப்பள பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மீண்டும் தொடர்ந்து வெயில் அடித்தால் தான் உப்பள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த ஆண்டு உப்பு உற்பத்திக்கான பணி சரியான நேரத்தில் தொடங்கி இருந்தாலும், இடை இடையே பெய்த மழையினால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
கடந்த 1 மாதமாக நல்ல வெயில் அடித்ததால் உப்பு தூர்வாரும் பணி நன்றாக இருந்தது. தற்போது மழை பெய்ததால் உப்பு எடுக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் தொடங்க 1 வார காலமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.