தமிழக செய்திகள்

தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு!

சுமார் 22,000 போலீசார் 3 வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் சென்னை முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

சென்னை,

சென்னை பெருநகர் காவல்துறை வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2026 கடந்த 23.04.2026 அன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆயுதங்கள் ஏந்திய காவல் குழுவினர் மூலம் பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டு ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் மேற்பார்வையில், இணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், துணை ஆணையாளர்கள் தலைமையில் மேற்படி 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் 4 அடுக்கு பலத்த காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பலத்த பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அபின் தினேஷ் மோதக், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், வாக்கு எண்ணும் 04.05.2026 நாளன்று சென்னை பெருநகர் முழுவதும் கூடுதல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள், சிறப்பு காவல் படை, ஆயுதப்படை, மத்திய ஆயுதப்படை பிரிவைச்சேர்ந்த காவல் ஆளிநர்கள் உட்பட சுமார் 22,000 போலீசார் 3 வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் சென்னை பெருநகர் காவல் எல்லை முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.