தமிழக செய்திகள்

பெரம்பூர் தொகுதி தேர்தல் வழக்கை ரத்து செய்யக் கோரிய முதல்-அமைச்சர் விஜய்யின் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

பெரம்பூர் தொகுதி தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய முதல்-அமைச்சர் விஜய்யின் மனுவை நீதிபதி வி.லட்சுமிநாராயணன் தள்ளுபடி செய்துள்ளார்.

சென்னை,

2026 சட்டசபை தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க. தலைவர் விஜய் 1,20,365 வாக்குகளைப் பெற்று 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் 66,650 வாக்கு பெற்றிருந்தார்.

பெரம்பூர் தொகுதி

பெரம்பூர் தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய் பெற்ற வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் தொகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்தனர்.

வாக்காளர் தினேஷ் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக் கோரி முதல்-அமைச்சர் விஜய் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, முதல்-அமைச்சர் விஜய், வாக்காளர் தினேஷ் தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இருதரப்பு வாதங்கள்

வழக்கு விசாரணையின்போது தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்த வாக்காளர் தினேஷ் தரப்பில், முதல்-அமைச்சர் விஜய் தனது வேட்புமனுவில், பண்ருட்டியில் வாங்கியிருந்த 30 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய நிலம் குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை எனவும், தகவல்களை மறைத்தது, வாக்காளர்கள் சுதந்திரமாக முடிவெடுக்கும் திறனில் தேவையில்லாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

வேட்புமனுவில் தகவல்களை மறைப்பது, வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துவதுதான் என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் வாங்கியுள்ளதாகக் கூறியுள்ள 50 செண்ட் நிலம், வருவாய் துறை ஆவணங்களின்படி, அரசு புறம்போக்கு நிலம் என தினேஷ் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

முதல்-அமைச்சர் விஜய் தரப்பில், “வேட்புமனுவில் தகவல்களை மறைத்தது வாக்காளர்கள் சுதந்திரமாக முடிவெடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சென்னை ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு, குற்ற வழக்கு சம்பந்தப்பட்டது. விஜய் வசதிபடைத்தவர் என எல்லா வாக்காளருக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது, சொத்தை மறைத்ததாகக் கூறி, அது வாக்காளர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எப்படி கூற முடியும்?” என வாதிடப்பட்டது.

வழக்கு தள்ளுபடி

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த அக்டோபர் 14-ந்தேதி, விஜய்யின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், பெரம்பூர் தொகுதி தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய முதல்-அமைச்சர் விஜய்யின் மனுவை இன்று நீதிபதி வி.லட்சுமிநாராயணன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT