கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மறு அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் தனியார் மருத்துவமனையில், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றியவர். அவர் சிகிச்சை அளித்த நபர்களிடம் இருந்து, அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டதால், கடந்த வருடம் ஏப்ரல் 19ம் தேதி காலமானார்.

இதையடுத்து மருத்துவர் சைமனின் உடலை மயானத்தில் புதைக்க இரண்டு இடங்களில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், காவல்துறையின் பாதுகாப்போடு, அவரது உடல் வேலங்காடு மயானத்தில் புதைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரது உடலை கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லறை இடத்தில் அடக்கம் செய்யவேண்டும் என அவரது மனைவி கோரிக்கை விடுத்தார். ஆனால், தனியார் கல்லறை நிர்வாகம் மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மறுத்துவிட்டது.

இந்நிலையில் சைமன் ஹெர்குலசின் மனைவியின் கோரிக்கையை ஏற்று, அவரது உடலை கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மறு அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவடி வேலங்காடு இடுகாட்டிலிருந்து பாதுகாப்புடன் உடலை தோண்டி எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.