தமிழக செய்திகள்

பல்லடம் மின் மயானம் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

பல்லடம் ரோட்டரி மின் மயான அறக்கட்டளை தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் மின் மயானம் அமைப்பதற்கு அதே பகுதியைச் சேர்ந்த பல்லடம் ரோட்டரி மின் மயான அறக்கட்டளையும், ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி அதிகாரியும் கடந்த 2015ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து அறக்கட்டளை, மின் மயான கட்டுமான பணியை தொடங்கிய நிலையில் திட்ட ஒப்புதல் பெறவில்லை என கூறி கட்டுமான பணியை நிறுத்தி வைக்க நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.

அதன்பின்னர் பல்லடம் நகராட்சி சார்பில் ஒரு கோடியே நாற்பது லட்சம் ரூபாய் செலவில் மின் மயானம் அமைக்க அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டெண்டர் கோரப்பட்டு கட்டுமான பணியும் முடிந்துவிட்டது.

அறக்கட்டளை செலவில் மின் மயானம் கட்டி தர ஒப்பந்தம் செய்த நிலையில் அரசுக்கு செலவை ஏற்படுத்தும் வகையில் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி அதிகாரி, பனிக்கபட்டி கிராம பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக அறக்கட்டளை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

மேலும் அறக்கட்டளை செயலாளர் அரவிந்த் பாபு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இந்த விவகாரத்தில் கூட்டு சதி குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டார்.

“மனுதாரர் அறக்கட்டளையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி 25 சதவீத பணி நிறைவடைந்த நிலையில் பணியை நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டு ரூ.1 கோடியே 40 லட்சம் செலவில் மின் மயானம் கட்டப்பட்டுள்ளது. இந்த செயல் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தும் செயல்” என நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும் மத்திய தணிக்கை துறை இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஜூன் 15ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

SCROLL FOR NEXT