சென்னை,
நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட்டு மதுரை கிளையில், திண்டுக்கலைச் சேர்ந்த வக்கீல் பர்வேஷ் முஷ்ரப் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "கும்பகோணத்தைச் சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் நிறுவனம் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 57 பேர் ஆகஸ்டு 23-ந்தேதி கும்பகோணத்தில் இருந்து நேபாளத்திற்கு புனித யாத்திரை சென்றனர். ஆகஸ்டு 26-ந் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர்.
இவர்களில் சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி வி.சிவஞானம் உள்ளிட்டோர் காணாமல் போயுள்ளனர். நேபாளம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 57 பேரில் மீட்கப்பட்டவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள். காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை, அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கவும், மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும். மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், “தமிழ்நாட்டில் இருந்து கைலாசத்துக்கு யாத்திரை சென்ற 305 பேரில், 220 பேர் மீட்கப்பட்டு, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 85 பேரை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்பட காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், அரசு செலவில் காத்மாண்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.
இதையடுத்து, நேபாள வெள்ளத்தில் சிக்கி, காணாமல் போனவர்களை மீட்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.