சென்னை,
திருவண்ணாமலைக்கு சாமி கும்பிட ஆந்திராவில் இருந்து 26 வயது இளம்பெண் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது வளர்ப்புத் தாய் மற்றும் மாமாவுடன் சரக்கு வாகனத்தில் வந்தார். அப்போது அந்த இளம் பெண்ணை மிரட்டி திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீஸ்காரர்கள் சுந்தர், சுரேஷ் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில், பாதிக்கப்பட்ட இளம் பெண் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ''பாலியல் வன்கொடுமை வழக்குகளை சட்டப்படி 2 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என மாநிலம் முழுவதும் உள்ள மகளிர் சிறப்பு கோர்ட்டுகளுக்கும், செசன்சு கோர்ட்டுகளுக்கும் உத்தரவிட வேண்டும். மாநிலம் முழுவதும் எத்தனை பாலியல் வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளன? என்பது குறித்த விவரங்களை சமர்ப்பிக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். என் வழக்கையும் விரைவாக விசாரித்து முடிக்க திருவண்ணாமலை கோர்ட்டுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முன்னுரிமை கொடுத்து இந்த அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.
பொதுவாக பாலியல் வழக்குகளில் விரைந்து நீதி வழங்கும் வகையில் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கேற்ப கோர்ட்டுகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். குறிப்பாக மரபணு சோதனை மற்றும் தடயவியல் ஆய்வகங்களை அதிகளவில் அமைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இதுதொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்'' என்றார்.
போலீஸ் தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வக்கீல் ஜான் சத்யன், ''பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை இந்த அரசு தீவிர குற்றமாக கருதுகிறது. திருவண்ணாமலை சம்பவத்தை பொறுத்தமட்டில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் இருவரும் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்'' என்றார்.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூன் 22-ந்தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், ''திருவண்ணாமலை வழக்கில் கடந்தாண்டு நவம்பரில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தும், இதுவரை திருவண்ணாமலை மகளிர் கோர்ட்டு நீதிபதி விசாரணையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது புரியவில்லை'' என்றனர். பின்னர், ''இந்த பாலியல் வழக்கை திருவண்ணாமலை கோர்ட்டு தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரித்து வரும் ஜூலை 31-ந்தேதிக்குள் தீர்ப்பு அளிக்கவேண்டும்'' என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.