தமிழக செய்திகள்

பாலியல் வழக்குகளை 2 மாதத்துக்குள் முடிக்க வேண்டும்: மாவட்ட நீதிபதிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

திருவண்ணாமலையில் போலீஸ்காரர்கள் 2 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஆந்திர மாநில பெண், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

சென்னை,

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் 2 மாதத்துக்குள் பாலியல் வழக்குகளை விசாரித்து முடிக்க மாவட்ட கோர்ட்டு நீதிபதிகள் அனைத்து முயற்சிகளையும் எடுக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

போலீஸ்காரர்கள் கைது

ஆந்திராவில் இருந்து உறவினருடன் திருவண்ணாமலைக்கு சாமி கும்பிட இளம்பெண் ஒருவர் வந்தார். அவரை திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் வேலை செய்யும் போலீஸ்காரர்கள் சுந்தர், சுரேஷ் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் போலீஸ்காரர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆந்திர மாநில பெண், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் "பி.என்.எஸ்.எஸ். சட்டப்பிரிவு 346 (1)-ன்படி பாலியல் வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து, 2 மாதத்துக்குள் அந்த பாலியல் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும். போக்சோ வழக்கிலும், பாதிக்கப்பட்ட குழந்தையின் வாக்குமூலத்தை 30 நாட்களுக்குள் பெற வேண்டும். ஆனால் இந்த 2 நடைமுறைகளும் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படுவது இல்லை.

2025-ம் ஆண்டு நவம்பர் 4-ந்தேதி என்னுடைய வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஆனால் கடந்த ஏப்ரல் 7-ந்தேதி வரை குற்றச்சாட்டு பதிவுக்குபின் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதேபோல, ராணிப்பேட்டையில் 19 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்த வழக்கும் குறித்த நாளுக்குள் விசாரித்து முடிக்கப்படவில்லை. எனவே, என் வழக்கு உள்பட பாலியல் வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

தமிழ்நாட்டில் 1,920 பாலியல் பலாத்கார வழக்குகள்

இந்த வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும் இதுநாள் வரை 1,920 பாலியல் பலாத்கார வழக்குகள் உள்ளன. அதில், ஆயிரத்து 55 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, மாநிலம் முழுவதும் நிலுவையில் உள்ள 18 ஆயிரத்து 518 போக்சோ வழக்குகளில் 12 ஆயிரத்து 983 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன" என்பது உள்ளிட்ட விவரங்கள் கூறப்பட்டிருந்தது.

பாலியல் வழக்குகளை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க நடவடிக்கை

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க அனைத்து மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதிகளும், மகளிர் சிறப்பு கோர்ட்டு நீதிபதிகளும் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

வேலியே பயிரை மேய்ந்த கதை

வேலியே பயிரை மேய்ந்த கதையாக பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீசாரே வேட்டைக்காரர்களாக மாறும் நிகழ்வுகள் மீண்டும் தமிழ்நாட்டில் நடைபெறக்கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை என்பதை போலீஸ் டி.ஜி.பி. உறுதி செய்யவேண்டும். அத்துடன் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளின் விசாரணையை தேவையின்றி கீழ் கோர்ட்டுகள் தள்ளிவைக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்.

ஒரு ஆண்டுக்குள் போக்சோ வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும்

போக்சோ வழக்குகளில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 30 நாட்களில் பாதிக்கப்பட்ட குழந்தை அல்லது சிறார்களிடம் வாக்குமூலம் பதிவு செய்து, ஓராண்டுக்குள் வழக்கு விசாரணையை போக்சோ சிறப்பு கோர்ட்டுகள் முடிக்க வேண்டும்.

6 புதிய போக்சோ சிறப்பு கோர்ட்டுகள்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்களை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க டி.ஜி.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்களில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டுகளில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநிலத்தில் 6 புதிய போக்சோ சிறப்பு கோர்ட்டுகளை தொடங்குவது குறித்து முடிவு எடுத்து, 2 மாதங்களில் இதுதொடர்பாக ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.