தமிழக செய்திகள்

பேராசிரியர்களின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்த பரிசீலிக்க வேண்டும் - தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தற்போது பணியில் உள்ள பல பேராசிரியர்கள் இன்னும் சில ஆண்டுகளில் பணி ஓய்வு பெறவுள்ளனர்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “தமிழ் நாடு உயர்கல்வித்துறையில் பல ஆண்டுகளாக சீரான இடைவெளியில் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. மாநிலத்தின் பல பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் அதிகளவில் காலியாக உள்ளன. இதனால் மாணவர்களின் உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் கல்வித்தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச ஆசிரியர்கள் கூட பல கல்வி நிலையங்களில் இல்லை. தற்போது பணியில் உள்ள பல பேராசிரியர்கள் இன்னும் சில ஆண்டுகளில் பணி ஓய்வு பெறவுள்ளனர். இதனால், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பற்றாக்குறை மேலும் தீவிரமடையும்.

ஓய்வு வயது உயர்வு

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2007-ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு அனுப்பியுள்ள பரிந்துரைப்படி பல மாநிலங்கள் பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயதை 60-ல் இருந்து 65 ஆக உயர்த்தியுள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் ஓய்வுபெறும் வயது உயர்த்தப்படவில்லை.

எனவே, தமிழ்நாட்டிலும் பல்கலைக்கழக பேராசிரியர்களின் ஓய்வுபெறும் வயதை 60-ல் இருந்து 65 ஆக உயர்த்தக்கோரி கடந்த ஆண்டு நவம்பர் 28-ந்தேதி தமிழ்நாடு அரசுக்கு மனு அளித்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று கூறப்பட்டிருந்தது.

பரிசீலனை

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.டி.ஆஷா முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் தாட்சாயிணி ரெட்டி யும், அரசு தரப்பில் வக்கீல் கே.சதீஷூம் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "மனுதாரர் எழுப்பியுள்ள கோரிக்கை பரிசீலனைக்குரியதாகவே உள்ளது. எனவே பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயதை 60-ல் இருந்து 65 ஆக உயர்த்தக்கோரும் மனுதாரரின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு 8 வாரத்துக்குள் பரிசீலித்து சட்டப்படி தகுந்த முடிவு எடுக்கவேண்டும்" என்று உத்தரவிட்டார்.