கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ஏரியில் மண் எடுத்த வழக்கு: எ.வ.வேலுவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது - போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

முன்ஜாமீன் மனுக்களுக்கு போலீஸ் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 15-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

சென்னை,

திமுக மாநாட்டுக்காக ஏரியில் மண் எடுத்த வழக்கில் எ.வ.வேலுவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று போலீசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்

தி.மு.க. வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு, கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் 14-ந்தேதி, திருவண்ணாமலையில் நடந்தது. இந்த மாநாட்டு திடலை சமன்படுத்துவதற்காக, அருகில் உள்ள மலப்பம்பாடி ஏரியில் இருந்து சட்டவிரோதமாக 12 ஏக்கர் பரப்பளவுக்கு, 10 முதல் 23 அடி ஆழத்திற்கு மண் எடுக்கப்பட்டதாகவும், இதன்மூலம் அரசுக்கு ரூ.8 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில், கடந்த ஆகஸ்ட் 13-ந்தேதி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

வழக்கை ரத்து செய்யக் கோரி மனு

இந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் குமரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி இருவரும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணையின்போது, வழக்கு விசாரணைக்கு தடை எதுவும் விதிக்க முடியாது என்று நீதிபதி வி.லட்சுமிநாராயணன் உத்தரவிட்டார்.

விசாரணை தள்ளிவைப்பு

இந்த நிலையில், இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு இருவரும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவுக்கு பதிலளிக்க போலீஸ் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, எ.வ.வேலு, குமரன் ஆகியோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது என வாய்மொழியாக உத்தரவிட்டார். முன்ஜாமீன் மனுக்களுக்கு போலீஸ் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 15-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT