கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

கோவில் திருவிழாவில் ஆபாசமாக உடை அணிந்து ஆடினால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - ஐகோர்ட்டு எச்சரிக்கை

ஆபாச நடனத்தை எப்படி அனுமதிப்பது? என்று ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

கோவில் திருவிழாவில் ஆபாச உடை அணிந்து கரகாட்டம் ஆடினால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை செய்துள்ளது.

கரகாட்டம்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம், பாப்பாத்தம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

ஆபாச நடனத்தை எப்படி அனுமதிப்பது?

அப்போது நீதிபதி, "கரகாட்டம் ஆடும் பெண்களின் உடைகளைப் பார்த்திருக்கிறீர்களா? மிகவும் ஆபாசமாக உள்ளது. இதுபோன்ற ஆபாச நடனத்தை எப்படி அனுமதிப்பது? தமிழ்நாட்டை விட ஆந்திர மாநில கரகாட்டம் இன்னும் மோசம்" என்று கருத்து தெரிவித்தார். அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், "ஆபாச நடனம் மட்டுமல்லாமல், அரசியல் ரீதியான ஸ்லோகங்களையும் எழுப்ப வாய்ப்புள்ளது என்ற அச்சம் உள்ளதால், போலீஸ் அனுமதி வழங்கவில்லை" என்றார்.

கிராமத்து கலைநிகழ்ச்சி

அதற்கு நீதிபதி, 'அரசியல் பேச நாடு முழுவதும் உரிமை உள்ளது. அந்த உரிமை உடையார்பாளையத்துக்கும் உள்ளது. ஆனால் ஆபாச நடனத்துக்குத்தான் அனுமதி வழங்க முடியாது" என்றார். அதற்கு மனுதாரர் தரப்பில், "கரகாட்டம் காலம் காலமாக கிராமங்களில் நடந்து வரும் கலை நிகழ்ச்சி. அதற்கு அனுமதி வழங்க வேண்டும். பக்கத்து கிராமத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு இந்த ஐகோர்ட்டு நிபந்தனைகளுடன் கடந்த ஜூன் மாதம் அனுமதி வழங்கியுள்ளது" என்று கூறி அந்த உத்தரவு நகலை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

இதை படித்து பார்த்த நீதிபதி, "ஏற்கனவே இந்த ஐகோர்ட்டு நிபந்தனை அனுமதி வழங்கியுள்ளதால், இன்று (வியாழக்கிழமை) தொடங்கும் உடையார்பாளையம் கோவில் திருவிழாவுக்கும் நிபந்தனையுடன் கரகாட்டத்துக்கு அனுமதி வழங்குகிறேன்.

ஐகோர்ட்டு எச்சரிக்கை

ஆனால், கரகாட்டம் கலைஞர்கள் ஆபாசமாக உடை அணிந்து நடனம் ஆடினால் உடையார்பாளையம் போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்ல, ஆபாசமாக கரகாட்டம் ஆடியதற்கான ஆதாரங்கள் இருந்தால் அந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில், தாமாக முன் வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை செய்து உத்தரவிட்டார்.