தமிழக செய்திகள்

தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு: த.வெ.க. அரசை கவிழ்க்க தி.மு.க. குதிரை பேரம் நடத்தியதா?- அதிர்ச்சி தகவல்

த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க அக்கட்சி எம்.எல்.ஏ.க்களை தி.மு.க. விலைக்கு வாங்க முயன்றதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை,

தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பாக, த.வெ.க. அரசை கவிழ்க்க தி.மு.க. குதிரை பேரம் நடத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி

தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. அரசியலுக்கு புது வரவான த.வெ.க. 107 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் (5), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (2), இந்திய கம்யூனிஸ்டு (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.

ஆனால், இடைப்பட்ட நேரத்தில், தமிழகத்தில் எதிரும்.. புதிருமாக இருக்கும் இருபெரும் திராவிட கட்சிகளான தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயற்சித்ததாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணி அமைக்க முயன்றதா?

அதற்குள், த.வெ.க.வும் கூட்டணி ஆட்சி அமைத்ததுடன், ஆட்சியிலும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு பங்கு கொடுத்தது. அத்துடன், தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணி பரபரப்பும் முடிவுக்கு வந்தது.

அதன்பின்னர், தமிழக சட்டசபையிலும் த.வெ.க. அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் 25 பேர் ஆதரவாக வாக்களித்ததும் சர்ச்சை ஆனது. அந்த நேரத்தில் கருத்து தெரிவித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தி.மு.க. - அ.தி.மு.க. ஆட்சி அமைக்க கூட்டணி பேசியது உண்மை என்று அதிரடியாக குற்றம்சாட்டினார். தற்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீனும் அதை ஆமோதித்துள்ளார். இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினே தன்னுடன் போனில் பேசினார் என்றும் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

த.வெ.க. அரசை கவிழ்க்க சதி

இப்படி, தமிழக அரசியலில் தினம் ஒரு பரபரப்பு தகவலாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று உச்சகட்ட பரபரப்பாக, த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க அக்கட்சி எம்.எல்.ஏ.க்களை தி.மு.க. விலைக்கு வாங்க முயன்றதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான திருநாவுக்கரசர் என்பவர் போனில் தொடர்பு கொண்டு, தமிழக சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர உள்ளதாகவும், ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தாலும் அத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது தங்களுக்கு சாதகமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும், அதற்கு சன்மானமாக ரூ.35 கோடி வரை தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இது தொடர்பாக, த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா போலீசில் புகார் அளித்துள்ளார். இதேபோல், மேலும் 14 த.வெ.க. எம்.எல்.ஏ.க்களிடம் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கவர்னருடன் சபாநாயகர் சந்திப்பு

த.வெ.க. அரசை கவிழ்க்க தி.மு.க. முயற்சி மேற்கொண்டது உண்மைதானா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தில் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். 100 சதவீதம் தயாராக இருங்கள்" என்று நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில்தான், கடந்த மாதம் 29-ந் தேதி சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கவர்னர் அர்லேக்கரை கிண்டி மக்கள் மாளிகையில் சென்று சந்தித்தார். அவருடன் அமைச்சர்கள் நிர்மல்குமார், விஸ்வநாதன் ஆகியோர் சென்றிருந்தனர்.

ஆனால், இந்த திடீர் சந்திப்பு ஏன் நடந்தது? என்று அப்போது எதுவும் தகவல்கள் வெளியாகவில்லை.

சட்ட ரீதியிலான உதவி

அதற்கான காரணம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர இருப்பதையும், த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி நடப்பதையும் தெரிந்துகொண்டுதான் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர்கள் நிர்மல்குமார், விஸ்வநாதன் ஆகியோர் கவர்னரை நேரில் சந்தித்து புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், கவர்னர் அர்லேக்கரோ, சட்ட ரீதியாக எந்த உதவியையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்றும், மாற்று வழியில் உதவி செய்ய முடியாது என்றும் கூறிவிட்டதாக தெரிகிறது.

அடுத்தக்கட்ட பரபரப்பு

அதன் அடிப்படையிலேயே, த.வெ.க. எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் நடந்தது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இனி, தமிழக அரசியலில் அடுத்தக்கட்ட பரபரப்பு என்ன நடக்கிறது? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.