சென்னை,
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் என்று கூறி ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் ரூ.3.40 கோடி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் ஆந்திராவை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியின் 'வாட்ஸ் அப்' எண்ணில் மூத்த முதலீட்டு அதிகாரி ராஜீவ் மேத்தா என்று கூறி ஒருவர் பேசி உள்ளார். அவர், பெங்களூருவில் எங்களுடைய முதலீட்டு நிறுவனம் செயல்படுகிறது. எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தைகளை அள்ளிவிட்டுள்ளார்.
மேலும் அதிக முதலீட்டு லாபம் பெற்று பயனடைந்தவர்கள் பேசியது போன்று போலியான உரையாடல்களை அனுப்பியும் அவரை நம்பிக்கை வலையில் சிக்க வைத்து, மோசடி திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர். அவரும் அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.3.40 கோடி பணத்தை அவர்கள் சொல்லிய பல்வேறு வங்கி கணக்குகளுக்கு 13 தவணைகளாக அனுப்பி பணத்தை இழந்துள்ளார்.
இந்த மோசடி சம்பவம் குறித்து அவர் கடந்த ஆண்டு சென்னை ' போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
வங்கி அதிகாரியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.40 லட்சம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மெருடி மாவட்டத்தை சேர்ந்த கொனத்தலா கிருஷ்ணா (வயது 52) என்பவரின் வங்கி கணக்கிற்கு சென்றிருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து விசாகப்பட்டினத்தில் முகாமிட்டு அவரை அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் போலீசார் நடத்திய புலன் விசாரணையில், ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி 13 பரிவர்த்தனைகளாக அனுப்பிய தொகையானது 150 வங்கிகள் மற்றும் 27 வங்கி செயலி மூலமாக மொத்தம் 8,574 வங்கி கணக்குகளுக்கு பரிவர்த்தனைகளாக அனுப்பப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்த வழக்கில் சுமார் ரூ.21 லட்சம் பணத்தை போலீசார் மீட்டுள்ளனர்.