கடலூர்,
வீரியமிக்க பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதியானதால் கட லூர் அருகே 39 ஆயிரம் கோழிகள் உயிருடன் அழிக்கப்பட் டன. மேலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள் ளன.
கடலூர் மாவட்டம் நொச்சிக்காடு, தியாகவல்லி, கட்டியங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் கொத்துக்கொத்தாக செத்து விழுந்தன. இதுகுறித்து தகவலறிந்த கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் இறந்த கோழிகளின் மாதிரிகளை ஆய்வுக்காக ஈரோடு, நாமக்கல், சென்னை மற்றும் போபாலில் உள்ள மத்திய ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து போபாலில் இருந்து வந்த ஆய்வறிக்கையில், கட்டியங்குப்பம் கிராமத்தில் உள்ள பண்ணையில் 'ஹைலி பேத்தோஜெனிக் ஏவியன் இன்ப்ளூயன்ஸா' என்ற வீரியமிக்க பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனையடுத்து நோய் பரவலைத் தடுக்க அப்பகுதியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
மேலும், கட்டியங்குப்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட பண்ணைகளில் இருந்த சுமார் 34 ஆயிரத்திற்கும் அதிகமான கோழிகள் பொக்லைன் எந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு, பிளிச்சிங் பவுடர் தூவி உயிருடன் புதைக்கப்பட்டன.
இதேபோல் முன்னெச்சரிக்கையாக கடலூர் மத்திய சிறை வளாகத்தில் வளர்க்கப்பட்ட 5 ஆயிரம் கோழிகளும் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டன. மேலும், கடலூரில் உள்ள பிற பண்ணைகளிலும் நோய் பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.