சென்னை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருபதாவது:-
வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 1,000மும், 5 கிலோ சிலிண்டர் விலையை ரூ. 261ம் மத்திய அரசு மீண்டும் உயர்த்தியுள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வன்மையாக கண்டிக்கிறது. இந்த கடுமையான விலை உயர்வு மக்களுக்கும், சிறு வணிகர்களுக்கும் கடுமையான சுமையாகும்.
ஏற்கனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வேலையின்மை மற்றும் வருமானப் பற்றாக்குறை ஆகியவற்றால் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், வணிக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வு, குறிப்பாக தேநீர் கடைகள், ஹோட்டல்கள், சாலை ஓர வியாபாரிகள் போன்றோரின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும். உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் சொல்லொணா துயரத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும்.
மத்திய அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், நிறுவனங்களின் லாபத்தை முன்னிறுத்தும் பொருளாதாரக் கொள்கைகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிகக் குறைவாக இருந்தபோது அதற்கு ஈடாக இந்தியாவில் விலைகள் எப்போதும் குறைக்கப்படவில்லை. சர்வதேச சந்தையில் விலைகள் குறைகிற போது பல மடங்கு லாபமீட்டிய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில்
விலை உயர்ந்த போது மட்டும் அதனை மக்கள் தலையில் சுமத்துவது ஏற்புடையதல்ல. எதிர்பாராத நெருக்கடிகளை எதிர் கொள்ளக்கூடிய விதத்தில் அரசு போதுமான அளவிற்கு இயற்கை எரிவாயுவை கையிருப்பு வைப்பதற்கான ஏற்பாடுகள் எதையும் செய்வதில்லை. அதன் விளைவை இன்றைக்கு நாட்டு மக்கள் மீது அரசு விலை உயர்வை சுமத்துகிறது. இதன் விளைவாக அத்தியாவசிய பொருட்களுக்குக் கூட மக்கள் அதிக விலை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறார்கள்.
எனவே, வணிக மற்றும் சிறிய அளவிலான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், பொதுமக்களுக்கும் மற்றும் சிறு வணிகர்களுக்கும் மானியத்தை மீண்டும் வழங்க வேண்டும், எரிபொருள் விலைகளை கட்டுப்படுத்தும் நீண்டகால திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசை வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.