தமிழக செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.84க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ரூ. 3.14 விலை உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 103.98க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ. 92.39க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ரூ. 3.11 விலை உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் டீசல் ரூ. 95.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது;-

மத்திய பாஜக அரசால் நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் சங்கிலித் தொடர் போன்ற பாதிப்புகளை உருவாக்கும். இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும்.

புயலில் சிக்கிய படகு போலக் குடும்பங்கள் தள்ளாடும் நிலை ஏற்படும். எனவே, மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கு மானியம் வழங்கி, இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.