மதுரை,
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட்டில் நாளையும் (நவ.19) விசாரணை தொடரும் என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் துாணில், கார்த்திகை தீபம் ஏற்றலாம் என, கடந்த ஆண்டு டிசம்பரில், சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். கல் துாணில் தீபம் ஏற்ற அனுமதித்தால், மத மோதல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறி, தமிழக அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், நீதிமன்ற உத்தரவை மீறி, உச்சிப் பிள்ளையார் கோவில் மண்டபத்திலேயே கடந்த ஆண்டு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சி.ஐ.எஸ்.எப்., எனப்படும், மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்புடன் மனுதாரர்கள் 10 பேருடன் சென்று, மலையில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
இம்மனு சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம்.பஞ்சோலி அமர்வில் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணையின்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள், வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட புகைப்பட ஆதாரங்களை ஆய்வு செய்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். இவ்வழக்கில் இடைக்கால உத்தரவு இன்று ( புதன் கிழமை) பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட்டில் நாளையும் (நவ.19) விசாரணை தொடரும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 2வது நாள் விசாரணையில் மாவட்ட கலெக்டர், தர்கா தரப்பு வாதங்களை முன்வைத்த நிலையில், நாளைய விசாரணையில் இடைக்கால உத்தரவுக்கான சுருக்கமான வாதங்களை முன்வைக்க நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணி இன்று மாலை ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தது. இதன்படி தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டநிலையில் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலையை சுற்று போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.