மதுரை,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதிகள் உள்பட வழிகாட்டுதல் குழுவினர் முன்னிலையில், சிஆர்பிஎப் வீரர்களின் பாதுகாப்புடன் இன்று மாலை 5 மணிக்கு மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க தலா 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட களிமண்ணில் தயாரான 3 தீபசட்டிகள், 15 லிட்டர் நெய், நெய்யில் பதப்படுத்தப்பட்ட கடா துணியிலான திரி, ஒரு கிலோ கற்பூரம் உள்ளிட்ட தீப உபகரணங்கள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி தீப அர்ச்சனைகள செய்தனர்.
இதனையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பி பார்த்திபன் முன்னிலையில் திருவண்ணாமலையில் இருந்து வந்த தீப நிபுணர் குழுக்கள் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றினர்.
தீபம் ஏற்றிய பின்னர் ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்திபன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டை பொறுத்தவரை, இந்து முஸ்லீம் ஒற்றுமையாக தான் வருகின்றனர்.
திருப்பரங்குன்றத்திலேயே அதை பார்த்தோம். இங்கு எந்த மத கலவரமும் கிடையாது. ஆனால் அரசியல் புகுந்ததால் அப்படி ஒரு தோற்றம் ஏற்பட்டது.முதன்முதலாக இந்த மலை ஏறி வந்துள்ளேன். பாதுகாப்பு ஏற்பாடுகள் நன்றாக இருந்தது. கோவில் நிர்வாகம் மற்றும் அறிக்கை குறித்து இருவரும் கலந்து பேசி அறிக்கை தாக்கல் செய்வோம்” என்றார்.