கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

பழனி மலைகளில் வரலாற்றுப் பொக்கிஷம்! 2,000 ஆண்டுகள் பழமையான இடுகாட்டில் ஆய்வு

அகழாய்வில் கிடைக்கும் அனைத்து பொருட்களும் முறையாக தொல்லியல் ஆய்வகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைப்பகுதியில் உள்ள குண்டாடி (மாச்சூர்) என்ற இடத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான இடுகாடு அமைந்துள்ளது. இந்த இடத்தில் அகழாய்வு செய்து ஆராய்ச்சி மேற்கொள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி.) மும்பை சார்பில் இந்திய தொல்லியல் ஆய்வகத்திடம் அனுமதி கோரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நிபுணர் குழுவின் ஆய்வுக்குப் பிறகு கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி அகழாய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

25 சதுர மீட்டரில் ஆய்வு

இதன்படி, ஐ.ஐ.டி. மும்பை சார்பில் 5 மீட்டர் நீளம், 5 மீட்டர் அகலம் கொண்ட மொத்தம் 25 சதுர மீட்டர் பரப்பளவில் மட்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆய்வுக்கு ‘தென்னிந்திய இடுகாடுகளின் நிலப்பரப்பு’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் மூலம் தென்னிந்திய மக்கள் இறந்தவர்களை எவ்வாறு அடக்கம் செய்தனர், அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் இறுதிச்சடங்குகள், கலாசாரம், சமூக வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுத் தகவல்களை அறிந்துகொள்ள முடியும் என ஆய்வின் தலைவர் ஸ்மிரிதி ஹரிச்சரன் தெரிவித்துள்ளார். இவர், ஐ.ஐ.டி. மும்பையின் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையில் இணை பேராசிரியராக உள்ளார்.

ஆய்வுப் பொருட்களை முறையாக ஒப்படைக்க உத்தரவு

இந்த ஆய்வின்போது, ஆய்வுத் தலைவர் ஸ்மிரிதி ஹரிச்சரன் ஆய்வு நடைபெறும் நாட்களில் சம்பந்தப்பட்ட இடத்தில் நேரில் இருக்க வேண்டும் என இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் தலைவர் ஹேமசாகர் நாயக் தெரிவித்துள்ளார்.

மேலும், அகழாய்வில் கிடைக்கும் அனைத்து பொருட்களும் முறையாகப் பட்டியலிடப்பட்டு, தொல்லியல் ஆய்வகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், திருச்சி சரக தொல்லியல் கண்காணிப்பாளர் ஆய்வு நடைபெறும் இடத்துக்கு அவ்வப்போது நேரில் சென்று ஆய்வுப் பணிகளை மேற்பார்வையிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT